கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் - மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் - மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 19 Aug 2020 10:51 PM GMT (Updated: 2020-08-20T04:21:49+05:30)

தென்னை விவசாயிகளின் நலனை காப்பதற்காக கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வேளாண்மைத் துறை மந்திரி நரேந்திரசிங் தோமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு 4.40 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கிறது.

2020-ம் ஆண்டில் அரவை கொப்பரை தேங்காய் பருவகாலத்தில் கிலோவுக்கு ரூ.99.60 என்று குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தது. தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு சவால் களை சந்தித்து வருகிறது.

2018-ம் ஆண்டில் கஜா புயலினாலும், 2019-ம் ஆண்டில் ருகோஸ் பூச்சியின் தாக்கத்தாலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தேங்காய் விளைச்சல் காலத்தில் விவசாயிகளுக்கு, தேங்காய் பறிப்பது, வேறிடத்துக்கு கொண்டு செல்வது, சேமித்து வைப்பது என பல்வேறு செலவுகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால், அவர்கள் மேலும் கடுமையாக பாதிப்படைந்தனர். கூலிக்கு தேவையான ஆள் கிடைக்காததாலும், போக்குவரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் கூடுதல் செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது.

2020-ம் ஆண்டு கொப்பரை தேங்காய் பருவத்துக்கான விலை கொள்கையில் கடந்த ஜனவரி 23-ந் தேதியன்று தமிழக அரசு தனது கருத்தை தெரிவித்தது. கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.105 என்று விலை நிர்ணயம் செய்யும்படி கூறியிருந்தது.

தற்போது தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் அதன் சந்தை விலை ரூ.100 முதல் ரூ.110 என்றளவில் உள்ளது. தேங்காய் விவசாயத்தில் உள்ள சவால்களையும், உற்பத்திச் செலவையும் கருத்தில் கொண்டால், கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.99.60 என்ற குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை.

நெல், ராகி மற்றும் பருப்பு வகைகளுக்கு அதன் சாகுபடி செலவில் 150 சதவீதத்தை குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தேங்காய் உற்பத்திச் செலவு உயர்வு, தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை, பூச்சிகளின் தாக்கம், உள்ளட்டுச் செலவு உயர்வு போன்றவற்றை வைத் து பார்க்கும்போது, அந்த விவசாயிகளுக்கு போதுமான அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

எனவே தென்னை விவசாயிகளை காப்பாற்றுவதற்காக இந்த ஆண்டு பருவத்துக்கான கொப்பரை அரவைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.99.60 என்பதில் இருந்து உயர்த்தி குறைந்தபட்சம் ரூ.125 என்று மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story