அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் வளாக நேர்காணல் - 25 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் வளாக நேர்காணல் - 25 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Aug 2020 7:58 PM GMT (Updated: 20 Aug 2020 7:58 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதல் முறையாக ஆன்லைனில் வளாக நேர்காணல் நடைபெறுகிறது. முதற்கட்ட வளாக நேர்காணலில் 25 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையில் வளாக நேர்காணல் நடத்தி வருகிறது. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணலை தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரில் வந்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு நடத்தி வேலைவாய்ப்புகளை வழங்கும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக வளாக நேர்காணல் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

முதற்கட்ட வளாக நேர்காணலில் ‘விசா’ உள்ளிட்ட 25 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனங்கள் ஆன்லைனில் வளாக நேர்காணலை நடத்துகின்றன. முதற்கட்ட வளாக நேர்காணல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

நடப்பாண்டில் அண்ணாபல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இருந்து இளங்கலை மாணவர்கள் 2 ஆயிரத்து 100 பேரும், முதுகலை மாணவர்கள் 1,200 பேரும் பதிவு செய்து இருக்கின்றனர். 2-ம் கட்ட வளாக நேர்காணல் அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 45 நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழக மற்றும் தொழில்கூட்டுறவு மையத்தின் இயக்குனர் இனியன், கூடுதல் இயக்குனர் தி.கலைச்செல்வன் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 100 சதவீதம் ஆன்லைனில் வளாக நேர்காணல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் நேர்காணல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வளாக நேர்காணலில் பங்கேற்று இருக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு வளாக நேர்காணலில் குறைந்த அளவிலான நிறுவனங்கள் தான் பங்கேற்கும் என்று பலரால் பேசப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுகளில் வந்ததை போல நிறுவனங்கள் நேர்காணலுக்கு வந்திருக்கின்றன. எனவே மாணவர்கள் வளாக நேர்காணலுக்கு தயாராக இருக்கவேண்டும். கடந்த ஆண்டு வளாக நேர்காணலின்போது 189 நிறுவனங்கள் பங்கேற்றதில், 1,200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story