சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல் + "||" + Sathankulam incident: Father - son injured in 30 places on body; Judge Info
சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை,
சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டுமான வி.கே.சுக்லா வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜரானார்.
அவர், “மனுதாரர்களில் முருகன் என்பவர் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோருக்கு எதிரான புகாரில் கையெழுத்து போடுமாறு உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள் என்று தவறான தகவலை தெரிவித்துள்ளார். இதேபோல் முத்துராஜும் இந்த புகாரில் கையெழுத்து போட்டு உள்ளார். அவரும் ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியுள்ளார். மற்றொரு போலீஸ்காரரான தாமஸ் பிரான்சிசும் ஜெயராஜ்-பென்னிக்சை மற்றவர்கள் தாக்கும்போது, அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 38 பேரிடம் நாங்கள் விசாரணை நடத்தி உள்ளோம். ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ்காரர்கள் தாக்கியதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது“ என்றார்.
பின்னர் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வி.கே.சுக்லா நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
ஜெயராஜின் உடலில் 17-க்கும் மேற்பட்ட காயங்களும், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்களும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரியாத நிறைய காயங்களும் உள்ளதாகவும், அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் லஜபதிராய், “மனுதாரர்கள் 3 பேரும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்களில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கும்பட்சத்தில் சாட்சிகளை மிரட்டுவார்கள். தடயங்களை அழிப்பார்கள்“ என எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, “மனுதாரர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சிகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது.
சி.பி.ஐ. விசாரணை முடிவடைந்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மனுதாரர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும்“ என்றார்.
இதையடுத்து மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.