மாநில செய்திகள்

ஊரடங்கை தளர்த்துவதன் மூலமாக கொரோனா ஒழிந்துவிட்டது என்று தவறான சிந்தனையில் அரசு மூழ்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை + "||" + Government should not be misled into thinking that corona is extinct by easing curfew - MK Stalin

ஊரடங்கை தளர்த்துவதன் மூலமாக கொரோனா ஒழிந்துவிட்டது என்று தவறான சிந்தனையில் அரசு மூழ்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஊரடங்கை தளர்த்துவதன் மூலமாக கொரோனா ஒழிந்துவிட்டது என்று தவறான சிந்தனையில் அரசு மூழ்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஊரடங்கை தளர்த்துவதன் மூலமாக கொரோனா ஒழிந்துவிட்டது என்று தமிழக அரசு தவறான சிந்தனையில் மூழ்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் வருமானம் முழுமையாக பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை கொரோனா காரணமாக குலைந்து சுருண்டு விழுந்து கொண்டு இருக்கும் போது, அதில் மேலும் இடியை இறக்கியதைப் போல, சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவார்கள், பொறுத்துக்கொள்வார்கள் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதாகவே இதில் இருந்து தெரிகிறது..


இன்றைய பேரிடர் காலம் என்பது, மக்களின் நல்வாழ்வுக்கு பெரும் சவாலான காலம் மட்டுமல்ல. சமூக, பொருளாதார வாழ்க்கை, எதிர்காலம் அனைத்துக்கும் சவாலான காலம் ஆகும். இதில் ஆழமான புதைகுழிக்குள் தள்ளப்பட்ட அப்பாவி மக்களை மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து வகைகளிலும் மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. செய்ய நினைக்கவும் இல்லை.

அதே நேரத்தில் கொரோனாவோடு சேர்ந்து, தானும் தன் பங்குக்கு, மக்களை பொருளாதார ரீதியாக வேட்டையாடி காயப்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதன் அடையாளம்தான், வங்கிகள் நடத்தி வரும் வட்டி வசூலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வும். இது வழக்கமான காலம் அல்ல. இது கொடும் கொரோனா காலம். மார்ச் மாதத்தோடு மனிதர்களின் அன்றாட வாழ்க்கை அசைவின்றி அப்படியே நின்றுவிட்டது.

வேலைகள் இல்லை, வருமானம் இல்லை, ஊதியம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டன, வளர்ச்சி இல்லை, சிறுசிறு தொழில்கள் மொத்தமாக முடக்கம், பெரிய நிறுவனங்களில் இருந்தே உற்பத்தி இல்லை. இத்தகைய சூழலில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதனோடு சேர்த்து சுங்கக் கட்டணங்களும் கூடும் என்றால் என்ன பொருள்? மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையோ, அனுதாபமோ இல்லை, மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலையே இல்லை என்றே இதன் மூலம் தெரிகிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரம் (உள்நாட்டு உற்பத்தி) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவிகித பின்னடைவைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறை தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் இந்த அளவுக்கு முதல் முறையாக கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று சொல்வதும் மத்திய அரசு தான். இந்த வகையில் பார்த்தால், சாதாரண மனிதன் அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி அதைவிட அதிகமானது, மோசமானது. இதனைக் கவனத்தில் கொண்டு அல்லவா அரசாங்கம் செயல்பட வேண்டும்?

பசியில் வாடும் மனிதனுக்குச் சோறு போடாமல், கொஞ்சம் பொறு, உன்னிடம் கொஞ்சம் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறேன் என்பதைப் போலவே செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றன. நகரங்களை நோக்கி வந்து மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் அப்பாவிகளுக்கு அபராதம் போடும் வகையில், சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதன் மூலமாக, கொரோனா ஒழிந்துவிட்டது என்றோ, நாளை காலை முதல் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நின்றுவிடப்போகிறது என்றோ, மாநில அரசு தவறான சிந்தனையில் மூழ்க வேண்டாம். மாநில அரசும், மக்களுக்கு பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக, ஏழை எளிய நடுத்தர மக்களின் துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.