தி.மு.க. எம்.பி.க்கள் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் - கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. எம்.பி.க்கள் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் - கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 Sept 2020 11:01 PM IST (Updated: 4 Sept 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்று கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘சூழலியலை தகர்க்கும் சட்டம்’ என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 குறித்த கருத்தரங்கம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், சூழலியல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் உரையாற்றினர். மேலும் தி.மு.க. எம்.பி.க்கள், தி.மு.க. செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஓர் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தால் அது மக்களுக்கு ஓரளவு பயனுள்ள சட்டமாக அமையும். அத்தகைய நோக்கத்துடன் தான் சட்டம் கொண்டு வருவார்கள். ஆனால், மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு கொண்டுவரும் அனைத்து சட்டங்களும் மக்களுக்கு விரோதமான. மாநிலங்களுக்கு விரோதமான. ஜனநாயக விரோதமான சட்டங்களாக தான் இருக்கின்றன.

இப்போது சூழலியல் சட்டம் கொண்டு வந்து சூழலை மொத்தமாக காலி செய்யப்போகிறார்கள். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை என்று சொல்லப்படுகிற சுற்றுச்சூழல் வரைவு சட்டமானது எல்லா வகையிலும் மக்களுக்கு எதிரானதாக, இந்த சூழலை கெடுப்பதாக அமைந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு யார் அனுமதியும் தேவையில்லை. தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் யாரும் கேள்வி கேட்க முடியாது.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால் இது தனியார் மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் குறுக்கீடு இல்லாமல் நமது இயற்கை வளங்களை சுரண்டும். அரசு நிர்வாகத்தின் தலையீடு குறைந்து தனியார் தங்கள் விருப்பம் போல தடையில்லாமல் செயல்படும் நிலை ஏற்படும். இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அதனால் தான் எதிர்க்கிறோம்.

இந்த சட்டம் அமலானால் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர நினைக்கும் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து நாம் கேள்வி கேட்க முடியாது. இதுவரை மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் எதிர்க்காமல், மாநில அரசு மவுனமாக இருந்தது. அதேபோல தான் இப்போதும் இருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் இந்த செய்கை தவறானது; மக்களுக்கு எதிரானது; நாட்டின் எதிர்காலத்துக்கு எதிரானது. ஆனால் தி.மு.க. இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. முற்றிலுமாக எதிர்க்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டுவரக்கூடிய திட்டங்களில் சூழல் மீதான தாக்கத்தை ஆய்வு செய்து, சூழலுக்கு கேடு விளைவிக்குமானால் நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் கோரிக்கைகள் என்ன என்றால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் சட்டவரைவு வைக்கப்பட்டு இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக நமது திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கும், சூழலுக்கும் ஏதுவாக கொள்கைகளை வகுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது (தி.மு.க.) எம்.பி.க்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story