‘சாதி ரீதியான கேள்விக்கு பதில் அளியுங்கள்’ - டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘சாதி ரீதியான கேள்விக்கு பதில் அளியுங்கள்’ என்று டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற துணை கலெக்டர் முத்தையன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.க்கு) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வன்னியர், அக்னிகுல சத்திரியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பான மனுவை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மனுதாரர் கேட்கும் விவரங்களை வழங்க கடந்த 2009-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. மேல்முறையீடு செய்தது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல், “சாதி ரீதியான விவரங்களை வெளியிடுவதால் மக்களிடையே அதிருப்தியும், சாதி ரீதியான சண்டையும் தான் வரும்” என்று வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சினை வரும் என்று அச்சப்படுவது எல்லாம் மாயை மற்றும் கற்பனையானது. சாதி ரீதியான கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story