திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்: 3 பயணிகள் கைது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
செம்பட்டு,
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 176 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 6-ந்தேதி சிறப்பு விமானம் ஒன்று திருச்சிக்கு வந்தது. அப்போது, அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சேகர், சிவகங்கையை சேர்ந்த சசிவரன், கடலூரை சேர்ந்த முருகவேல் ஆகியோர் தங்கள் உடைமையில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் தவிப்பவர்களை மீட்டு வருவதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் தொடர்ந்து தங்கம் கடத்திவருவது வேதனை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story