“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது” - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது” - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 10 Sept 2020 1:45 AM IST (Updated: 10 Sept 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

“தற்போது குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருவதால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது” என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மதுரை, 

சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் செந்தில். சொத்து தகராறில் கடந்த 2010-ம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிவகங்கை மாவட்ட கோர்ட்டு 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடக்க வேண்டும் என்ற அடிப்படை தெரியாமல் மெத்தனமாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். இதனால் மனுதாரர் விடுவிக்கப்படுகிறார். எந்த விசாரணையாக இருந்தாலும் ஒருதலைபட்சமாக நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும். நியாயமான விசாரணை அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும்.

உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் விசாரணையின் நோக்கம். தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் நல்ல பெயர் உள்ளது. இந்த பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்துள்ளது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது. இதேபோல விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமார், பவுன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

விசாரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளார்களா? விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும் தற்போது உள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என உள்துறை செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story