குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவதை கட்டாயமாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
“குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவதை கட்டாயமாக்க வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் தலையாடிக்கோட்டை கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில் குடிமராமத்து பணிகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர்களுக்கு அனுமதி வழங்காமல், வேறொரு நபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து, தேர்தல் நடத்தி தகுதியான நபருக்கு குடிமராமத்து பணிகளை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிமராமத்து பணிகளை ரத்து செய்யக்கோரி வேறு சிலரும் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
நீர்ப்பாசன முறைகள் சட்டப்படி நீர்நிலைகளை பொறுத்த வரை அவற்றின் பராமரிப்பை சம்பந்தப்பட்ட விவசாயிகள் சங்கத்தினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பது மனுதாரர்களின் கருத்து. தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க வேண்டும். அதில் நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் இருக்க வேண்டும்.
கால்வாய்கள் மூலம் கூடுதல் மழை நீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். முறைகேடுகளாக நீர்நிலைகளில் பட்டா வழங்கி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூ.டி.ஆர். மற்றும் ‘அ‘ பதிவேட்டின்படி, நீர்நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இதில் அளவு குறைந்திருந்தால், அதற்குரிய காரணம் பதிவு செய்யப்படடு, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற வேண்டும். குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளின் கரைகள் வலுவாக இருக்கும். எல்லைகளையும் பாதுகாக்கலாம்.
இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story