பிரதமரின் கிசான் திட்ட ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை; முதல் அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பிரதமரின் கிசான் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் பரிந்துரை செய்யவேண்டும் என்றும், ரூ.110 கோடி விவசாயிகளின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், தாமாகவே பதிவு செய்து கொள்ளும் முறையால்தான் முறைகேடு நடைபெற்று விட்டது’, என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாமாகவே பதிவு செய்து கொண்டவர்கள் ஒருவரோ, இருவரோ அல்ல, 6 லட்சம் போலி நபர்கள்.
தமிழக அரசின் வேளாண் துறைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ‘இது ரூ.110 கோடி ரூபாய் ஊழல். மார்ச் மாதத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திடீரென்று ஆகஸ்டு மாதத்தில் 45 லட்சமாக உயர்ந்து விட்டது’, என்று கூறியுள்ளார். அவர் கணக்குப்படி போலிகள் 6 லட்சம் பேர். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘4 மாதத்தில் 41 லட்சம் பயனாளிகள் 46 லட்சம் பயனாளிகளாக அதிகரித்து விட்டார்கள்’, என்று கூறியிருக்கிறார். முதல்-அமைச்சர் சொல்லும் போலிக்கணக்கு 5 லட்சம் பேர். துறைச் செயலாளர் சொன்னதை விட, 1 லட்சம் போலி நபர்களை மறைப்பது ஏன்?
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை உறுதி செய்வது, அவற்றை பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என அனைத்தும் முழுக்க முழுக்க அ.தி.மு.க. அரசின் வேலை. பதிவேற்றம் செய்யப்பட்ட பயனாளிகளில் 5 சதவீதம் பேரை நேரடியாக, அவர்களின் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி அவர்கள் உண்மையான பயனாளிகளா என கண்டுபிடிப்பதும் அரசின் கடமை.
தாங்களாகவே பயனாளி ஒருவர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தாலும் அதில் உள்ள தகவல்கள் சரியானவைதானா? என்பதை, அ.தி.மு.க. அரசுதான் உறுதிசெய்ய வேண்டும். தாமாகவே பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட அந்த விண்ணப்பங்களையும் ஆய்வு செய்யவேண்டியது அரசின் கடமை. ஆகவே 6 லட்சம் போலிகள் சேர்ந்ததற்கும், ரூ.110 கோடி விவசாயிகளின் பணம் தகுதியில்லாதவர்களுக்குப் போனதற்கும் அ.தி.மு.க. அரசுதான் முழு முதற்காரணம். அப்படிப்பட்ட போலிகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு பணத்தை அளித்த பா.ஜ.க. அரசு இரண்டாவது காரணம்.
இந்த திட்டத்திற்கு, முதலில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையரும், வேளாண்துறையின் அரசு செயலாளரும் தலைமைச்செயலக முதன்மை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். அதற்கான அரசு ஆணை கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி வெளியானது.
ஆனால் திடீரென்று நான்கு நாள் கழித்து அதாவது 13.2.2019 அன்று, வேளாண்துறைச் செயலாளர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தலைமை செயலக ஒருங்கிணைப்பு பணி கைவிடப்பட்டுள்ளது. இதன்பிறகு, மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையரும், இத்திட்டத்தின் முதன்மை அதிகாரியாக வேளாண் துறை இயக்குனரும் மாற்றி நியமிக்கப்படுகிறார்கள். இந்த மாற்றத்தில் உள்ள மர்மம்தான் என்ன?
ஆகவே கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள், கான்டிராக்ட் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து விட்டோம், புரோக்கர் களை கைது செய்து விட்டோம் என்றெல்லாம் கூறி திசைதிருப்பாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.110 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள ஊழலில் உண்மை குற்றவாளிகளை, 6 லட்சம் போலிகள் சேருவதற்குக் காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story