ஒரே நாளில் 149 குழந்தைகளுக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் 149 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,324 ஆண்கள், 2,195 பெண்கள் என மொத்தம் 5,519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 149 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 718 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 987 பேரும், கோவையில் 394 பேரும், திருவள்ளூரில் 312 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 16 பேரும், ராமநாதபுரம், பெரம்பலூரில் தலா 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 32 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 478 ஆண்களும், 1 லட்சத்து 95 ஆயிரத்து 64 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 548 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 116 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 41 பேரும், தனியார் மருத்துவமனையில் 36 பேரும் என 77 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 21 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவை, தர்மபுரியில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் தலா இருவரும், விருதுநகர், திருச்சி, திருவாரூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் தலா ஒருவரும் என 28 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 231 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 932 பேரும், செங்கல்பட்டில் 692 பேரும், கோவையில் 550 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 422 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 47 ஆயிரத்து 918 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 882 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 212 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 478 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் 65 அரசு மற்றும் 100 தனியார் நிறுவனம் என மொத்தம் 165 நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story