நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன் - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி இரங்கல் தீர்மானத்துடன் முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'இன்று சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசு முன்னாள் தலைவர் மறைவுக்கும், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். அதற்கு முன் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.
நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டு தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை நிகழ்ந்துள்ளது. அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது, கண்டனத்துக்குரியது.
2 நாட்கள் மட்டுமே இனி பேரவை நடக்க உள்ளது. ஏற்கெனவே அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எங்கள் சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன் 2 நாட்கள் கூட்டம் போதாது. நாட்டில் பல்வேறு பிரச்சிகள் உள்ளன. அதுகுறித்து விவாதிக்கவேண்டும. ஆகவே 2 நாட்கள் போதாது என்று தெரிவித்தார். அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஏறத்தாழ 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களும், தனித்தீர்மானங்களும் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீட், சுற்றுச்சூழல் வரைவறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. 2 நாளில் எப்படி விவாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
நீட் விவகாரம் குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். பொதுக்குழு கூட்டத்திலும் தீர்மானம் போட்டார்கள், சட்டப்பேரவையில் தீர்மானத்திலும் ஒப்புதல் அளித்தார்கள். அதெல்லாம் மக்களை ஏமாற்ற நடந்த நாடகம். ஆனால், ஒருமுறைகூட டெல்லிக்குச் சென்றோ, பிரதமரையோ, மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நீட்டை நீக்க வலியுறுத்தவில்லை, போதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
ஆகவே இது கூனிக்குறுகிப்போயுள்ள மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு ஒரு அடிமை ஆட்சியாக எடப்பாடி தலைமையில் உள்ள ஆட்சி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story