மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு


மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2020 4:08 PM IST (Updated: 15 Sept 2020 4:08 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பல்வேறு துறைகளில் நடைமுறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் இல்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் வழி தேர்வுகள் கிடையாது என்றும் மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான கேள்விகள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்றும் 90 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விடைகளை ஏ4 தாள்களில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் படிந்துரையின் பேரில், சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story