ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு


ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு
x
தினத்தந்தி 16 Sep 2020 11:31 AM GMT (Updated: 16 Sep 2020 11:31 AM GMT)

ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழக அரசு இந்த தொகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியதாக அறிவித்தது. இது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி வாங்கியது எனவும், தானும் தனது சகோதரியும் அந்த இல்லத்தில் வளர்ந்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது அத்தையான ஜெயலலிதா, அந்த இல்லத்தில் பல குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தினார் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தனி நபர் சொத்துக்களை கையக்கப்டுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள அவர், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அவசர சட்டம் குறித்த தகவல் 2 மாதங்களுக்கு பிறகு தான் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து பேசிய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக உரிய சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஆளுனர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் சட்ட துறை செயலாளர் 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story