வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும்; மு.க. ஸ்டாலின்
வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இவற்றில் 3 வேளாண் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவற்றில் 2 வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.
எனினும், குரல் வாக்கெடுப்பு நடத்தி அந்த இரண்டு மசோதாக்களும் மேலவையில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, வேளாண் மசோதா பற்றி மு.க. ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார். வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளை பாதிக்க கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது.
பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று கூறினார்.
இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும். குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என எந்த பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story