சென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கும் ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. பேட்டி


சென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கும் ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2020 11:00 PM GMT (Updated: 2020-09-24T03:15:46+05:30)

சென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள் ஜோதி பேட்டி அளித்துள்ளார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னை மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திர குமார் கலந்து கொண்டு கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 பாதுகாப்புபடை வீரர்களுக்கு பூங்கொத்து, பழக்கூடை, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பிளாஸ்மா தானம் வழங்கிய 9 ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

மேலும் அனைத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை 128 ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். அதில் 38 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

இதில் 26 முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ரெயில்வே துறையில் திருச்சியில் மட்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புபடை டி.ஐ.ஜி. அருள் ஜோதி கூறும்போது, ‘சென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அவ்வாறு ரெயில் சேவை தொடங்கும்போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன், சென்னை சென்டிரல் பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story