வயதானவர்களுக்கு உரிய மரியாதை அளித்து பேணிக்காக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி, முதியோர் தின வாழ்த்து


வயதானவர்களுக்கு உரிய மரியாதை அளித்து பேணிக்காக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி, முதியோர் தின வாழ்த்து
x
தினத்தந்தி 1 Oct 2020 3:30 AM IST (Updated: 1 Oct 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

வயதானவர்களுக்கு உரிய மரியாதை அளித்து பேணிக்காக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதியோர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சர்வதேச முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதியோரின் நலன் காக்கவும், அவர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந் தேதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நமது தலையாய கடமையாக கொண்டு செயல்படவேண்டும்.

மூத்த குடிமக்கள் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், முதியோருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020-ம் ஆண்டில், 13 லட்சத்து 53 ஆயிரத்து 736 முதியோர்கள் பயனடைந்துள்ளனர்.

முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய 46 ஒருங்கிணைந்த வளாகங்களின் மூலம் 1,060 முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன் 21 முதியோர் இல்லங்கள் நடத்தப்பெற்று, அவற்றில் 723 முதியோர் தங்கி பயனடைந்து வருகின்றனர். ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ், 59 முதியோர் இல்லங்கள், ஒரு தொடர் சிகிச்சை மையம், 4 நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் 2 பிசியோதெரபி கிளினிக் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ சிகிச்சையும், முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோரின் நலனை கருத்தில் கொண்டு 1 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 3,141 முதியோருக்கு நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007-ன்படி, தமிழ்நாட்டில் 91 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், மொத்தம் 4,546 வழக்குகள் பெறப்பட்டு, 3,979 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவல் காலத்தில், ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242 சமுதாய சமையல்கூடங்கள் மூலம் 78 ஆயிரத்து 937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக 4,942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019-ம் ஆண்டிற்கான “வயோஸ்ரேஷ்தா சம்மன் விருது” தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கவுரவித்துள்ளது. முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம்மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story