பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Oct 2020 4:57 AM IST (Updated: 5 Oct 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெரியகுளத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 2-ந் தேதி பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் அவர் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், நீதிபதி, மாணிக்கம், சரவணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார். அங்கு அ.தி.மு.க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

இதையடுத்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வி, திருப்பூர் வடக்கு தொகுதி பாசறை செயலாளர் சந்திரசேகர் தலைமையில் வந்திருந்த 100-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மணிமேகலை, முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் தர்மர், திருப்பூர் ஒன்றிய தலைவர் சங்கீதா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சந்திப்பு குறித்து அவர்கள் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இதற்கிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவரின் உருவ சிலை அமைப்பதற்கு செலவாகும் ரூ.17 லட்சத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தருவதாக உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை அருகில் மூக்கையா தேவர் சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் நேற்று உசிலம்பட்டிக்கு வந்தனர். அப்போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் மூக்கையா தேவர் சிலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். அதன்பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story