கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நடந்தது


கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நடந்தது
x
தினத்தந்தி 5 Oct 2020 5:12 AM IST (Updated: 5 Oct 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 796 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, கடந்த மே 31-ந்தேதி முதல் நிலைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவையிலும் மற்றும் புதுச்சேரியிலும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் தேர்வு நடைபெறுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் முககவசம் அணியாமல் வந்தால், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதன்படி முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வந்த மாணவர்கள், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் கிருமிநாசினி திரவம் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் பொது அறிவுத்தேர்வும், பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை திறனறிவுத்தேர்வும் நடைபெற்றது. 2 தேர்வுகளும் தலா 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டன. பொது அறிவுத்தேர்வை பொறுத்தவரையில், விவசாயம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தேசிய வரலாறு ஆகியவற்றில் இருந்து 80 சதவீதம் வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், அதில் சில வினாக்கள் கணிக்க முடியாத பகுதிகளில் இருந்தும், பிரபலமற்ற பகுதிகளில் இருந்தும் கேட்கப்பட்டு இருந்ததாகவும், நடப்பு நிகழ்வுகள் குறித்து குறைவான வினாக்களே கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், பிற்பகலில் நடந்த திறனறிவுத்தேர்வை பொறுத்தவரையில், திறனறிவு வினாக்கள் குறைவாகவும், கணக்கு சம்பந்தப்பட்ட வினாக்கள் அதிகமாகவும் கேட்கப்பட்டு இருந்ததால், நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டதாகவும், வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டு இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர். இந்த தேர்வுக்கான முடிவு 40 முதல் 50 நாட்களுக்குள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்வார்கள். அதன்படி முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 8-ந்தேதி நடக்கிறது.

Next Story