மாநில செய்திகள்

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் + "||" + Tamil neglected in archeology diploma - Chief Minister Palanisamy's letter to Prime Minister Modi

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில், 2 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் குறைந்த பட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2004ம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.