தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு - நவம்பர் 10, 11ம் தேதிகளில் இறுதி விசாரணை


தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு - நவம்பர் 10, 11ம் தேதிகளில் இறுதி விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2020 8:05 AM GMT (Updated: 15 Oct 2020 8:05 AM GMT)

தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் நவம்பர் 10, 11ம் தேதிகளில் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல் விஜய் திரைப்படமாக எடுத்து வருகிறார். அதே போல, இயக்குநர் கவுதம் வாசுதேவ், ‘குயின்’ என்ற பெயரின் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக எடுத்து, அதனை ஆன்லைன் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா, தனது அனுமதி இல்லாமல் படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், தலைவி படத்தையும், குயின் தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, குயின் தொடரை ஒளிபரப்ப தடை இல்லை என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைவி படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஜெ.தீபா தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பட நிறுவனம், கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் நவம்பர் 10,11 தேதிகளில் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story