முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் ‘800’ என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும்.
‘800’ திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை; அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்.
‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று நான் வலியுறுத்தப் போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் ஈழத்தில் லட்சோப லட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்து விட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்‘ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.
தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முரளிதரனாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.
இனத் துரோகி முத்தையா முரளிதரனாக திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது. எனவே ‘800‘ திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பெற்று தக்க வைத்து வரும் தன்னேரில்லாத தமிழ் நடிகர், தனிப்பெருங்கோ அருமை நண்பர் விஜய் சேதுபதியே, ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தின்போது அவர்களுக்கு விரோதமாக சிங்களப் பேரினவாதத்திற்குத் துணை நின்ற விபீஷணன்தான் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தாங்கள் நடிப்பது உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு வேதனையைத் தரும் விரும்பத்தகாத ஒன்று.
இதை தவிர்ப்பது தங்களுக்கு நல்லது. தொழிலுரிமையில் தலையிடுவது என்பது சரியா என்ற கேள்வி நியாயமானதுதான் என்றாலும், சில விதிகளுக்கு விலக்கு உண்டல்லவா? கோடாரிகளை விட ஆபத்தானவை கோடாரிக் காம்புகள். எனவே, அத்தகைய ஒருவரின் வேடத்தில் நடிப்பதைத் தவிர்த்து தனித்ததோர் அடையாளத்தில் எழுவீராக!
நண்பர் விஜய் சேதுபதிக்கு இனப்படுகொலை எதிர்ப்பாளர்களான அனைத்து மனித நேயர்களின் வேண்டுகோள் இது! பந்து உங்கள் களத்தில் முடிவு செய்க!
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்தில் இருந்து விலகுவார் என அமைதிக் காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணி தொடங்கியிருப்பதால் அன்போடு அறிவுறுத்துகிறேன்.
முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story