2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு, கட்சியின் 49-வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளையும், வாஞ்சைமிகு வணக்கத்தையும் கூறி மகிழ்கிறோம். நாம், உயிரினும் மேலாக மதித்து, போற்றி, பாதுகாத்து வரும் நம் இயக்கத்திற்கு 48 ஆண்டுகால மக்கள் பணி நிறைவுற்று, 49-வது ஆண்டு தொடங்குகிறது.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செழித்து ஓங்கி, மக்கள் தொண்டாற்ற இருக்கும் அ.தி.மு.க. என்னும் இந்த மாபெரும் பேரியக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருக்கிறது. இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள் எல்லாம் கழகப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர். நமக்கு அளித்த மாபெரும் கொடையாக, இந்த இயக்கத்தை வழி நடத்த வந்த தேவதையாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பாதையில் பொற்கால ஆட்சி நடத்தினார். ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பாலும், நிகரற்ற ஆற்றலாலும், வியத்தகு அறிவாலும் அ.தி.மு.க. மகத்தான அரசியல் இயக்கமாகவும், மக்கள் பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆட்சியைத் தரத்தக்க இலக்கணம் அறிந்ததாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்களுக்குத் தொண்டாற்ற இருக்கும் அ.தி.மு.க. பணிகள் வரலாற்றுப் பொன்னேடுகளில் காலமெல்லாம் மின்னிக் கொண்டிருக்கும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிக்கும் அவர்களது அன்பு தொண்டர்களான நாம், நம் இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நம்முடைய ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும், அ.தி.மு.க.வையும், ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும். கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு உயர்நிலையை அடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயம், சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படையில் இங்கே கட்டி எழுப்பப்பட வேண்டும்.
“தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்ற பெருமிதம் நிலைபெறவேண்டும் என்பவையே இந்த இயக்கம் தனது இதயமாகக் கொண்ட லட்சியங்கள். அந்த லட்சியங்களை அடையவே அ.தி.மு.க. அரசு ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. எம்.ஜி.ஆரைப் போல, ஜெயலலிதாவைப் போல, நம் இருபெரும் தலைவர்களின் அன்பு தொண்டர்களான நாமும் தேர்தல் களத்தில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம். அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின்போது, அ.தி.மு.க.வே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம். ‘வாருங்கள், நம் பணிகளை இன்றே தொடங்குவோம்’ என்று அன்போடு அழைக்கிறோம்.
‘எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின்போது, அவர் தொடங்கிய அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்’ என்று ஜெயலலிதா 2015-ம் ஆண்டு சூளுரைத்து செய்து காட்டினார். அதைப் போலவே, அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியே தொடரும் என்று நாமும் சபதம் ஏற்று செய்து முடிப்போமாக. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை, கட்சிக்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி, அ.தி.மு.க.வை கட்டிக்காத்த தியாகிகளை நன்றியுடன் நினைவு கூருகிறோம். கட்சியின் பொன்விழா ஆண்டு நோக்கி புதுப் பயணம் தொடங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story