இடஒதுக்கீடு குறித்து, கவர்னரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாது-ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் போதிய இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
மதுரை,
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா குறித்து கவர்னர் முடிவு எடுக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்போவது இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் போதிய இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதா மீது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில்7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து, அதன் அடிப்படையில் அறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது. பின்னர் இதுதொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்றி, கவர்னரின் அனுமதிக்காக அரசு அனுப்பியது. இந்த நிலையில் நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதா பற்றிய கவர்னரின் நிலைப்பாடு பற்றி தெரிவிக்குமாறு கவர்னரின் செயலாளருக்கு நேற்று வரை கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பரபரப்பு வாதம் நடந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா தமிழக கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. சட்ட மசோதாவை அவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்; இல்லை என்றால் பரிசீலிக்குமாறு கூறலாம்” என்றார். மேலும் “இதுதொடர்பாக கவர்னருக்கு எந்த உத்தரவும் கோர்ட்டு பிறப்பிக்க முடியாது” என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “ஜல்லிக்கட்டு விவகாரத்தை அடுத்து, மருத்துவ உள்ஒதுக் கீடு மசோதாவுக்குத்தான் அனைத்து கட்சிகளும் ஒருசேர ஆதரவு அளித்து உள்ளன. சட்ட மசோதா மீதான முடிவை எடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா? நீட் தேர்வு முடிவுகள் வந்து, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா மீதான நடவடிக்கை பயனற்றதாகி விடும். எந்த முடிவாக இருந்தாலும் முன்னதாக தெரிவித்தால் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், “நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதால், உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. உள்ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிக அளவில் இடம் பெறுவார்கள் என்று பத்திரிகைகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாமல் ஏழை மாணவர்கள் உள்ளனர். கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களையும், வேதனைகளையும் அளவிட முடியாது” என்று தெரிவித்தார். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்த போது கண்கலங்கிவிட்டார்.
பின்னர், “ஏழை மாணவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா?” என்று ஏங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என்றும், இந்த கோர்ட்டு நம்புகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, “நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு கலந்தாய்வு, மருத்துவ கல்லூரிகளின் காலியிட விவரங்களின் அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும்?” என்று விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, சிறிது நேரத்தில் அட்வகேட் ஜெனரல் மீண்டும் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.அப்போது அவர், “உள்ஒதுக்கீடு மசோதா குறித்த கவர்னரின் முடிவு வருவதற்கு முன்பாக கலந்தாய்வு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாது” என்று உறுதி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 29-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story