மாநில செய்திகள்

அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: சென்னையில், விடிய விடிய கனமழை - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி + "||" + Northeast monsoon In Chennai, heavy rain By rainwater surrounding residential areas People suffer

அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: சென்னையில், விடிய விடிய கனமழை - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: சென்னையில், விடிய விடிய கனமழை - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியிருக்கிறது. சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றாக நீங்கி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்தது. அந்தவகையில் சென்னையிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.


இதனால் நேற்று மாலை முதலே லேசான குளிருடன் இதமான சூழல் நிலவியது. வடகிழக்கு பருவமழை வசந்தமாய் வந்ததென மக்கள் எண்ணி மகிழ்ந்தனர். ஆனால் இரவு 11 மணிக்கு மேலாக வானில் கருமேகங்கள் திரண்டு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை நிலவியது. சென்னையில் அவ்வப்போது இரவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்து வருவதால், இதுவும் லேசான மழையாக இருக்கக்கூடுமோ... என்ற மக்களின் எண்ணம் அடுத்தடுத்த நிமிடங்களில் தவிடு பொடியானது.

சாரல் போன்று மழைத்துளிகளுடன் தொடங்கிய மழை நள்ளிரவுக்கு மேல் வெளுத்து வாங்க தொடங்கியது. இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இடி-மின்னலின் சத்தம் நள்ளிரவு 3 மணியை தாண்டியும் ஒலித்து கொண்டிருந்தது. இதனால் ஏராளமான வீடுகளில் மக்கள் தூக்கம் கலைந்தது என்றே சொல்லலாம். பல வீடுகளில் இடி-மின்னல் சத்தத்துடன் குழந்தைகளின் அழுகுரலும் ஒலித்து கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் மழையின் தீவிரம் ஓய்வது போல தோன்றியது. ஆனால் அதிகாலை 4 மணிக்கு மேல் மழை மீண்டும் வேகம் எடுத்தது. அதிகாலை வரை இடைவிடாது மழையின் வேகம் இருந்தது. காலை 7 மணிக்கு பிறகும் வேகம் குறைந்தாலும் மழை பெய்தபடியே இருந்தது. அந்தவகையில் சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தூங்காநகரம் என்று மதுரை அழைக்கப்படுவது போல மழையின் தீவிரத்தாலும், இடி-மின்னலின் சத்தத்தாலும் சென்னையும் நேற்று தூங்காநகரம் ஆகி போனது.

நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான இடங்களில் வெள்ளம் போன்று தண்ணீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொரட்டூர், கொளத்தூர், பாடி, நந்தனம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கெல்லீஸ், சூளைமேடு, தேனாம்பேட்டை, ஓட்டேரி, வியாசர்பாடி, மூலக்கடை, அயனாவரம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் தங்கள் வசிப்பிடத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் அவதிக்கு ஆளானார்கள்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை நகரின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக கொரட்டூர், திருமங்கலம், மயிலாப்பூர், வானகரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு மேல் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டது.

இடைவிடாது பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாசாலை, பீட்டர்ஸ் சாலை, மாண்டியத் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சிலரது இருசக்கர வாகனங்கள் திடீர் பழுது காரணமாக ஓடாமல் நின்றது. அதனை பரிதவிப்புடன் தள்ளிச்செல்லும் வாகன ஓட்டிகளையும் அதிகமாகவே பார்க்க முடிந்தது. இதனால் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நேற்று இயல்பு வாழ்க்கை ஓரளவு முடங்கியது என்றே சொல்லலாம். தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக நேற்று காலை மக்கள் நடமாட்டம் அவ்வளவாக காணப்படவில்லை. பல வீடுகளில் பால் பாக்கெட்டுகள், பத்திரிகை வரவில்லை என்ற புகார்களும் எழுந்தன. நகரில் சாலையோர கடைகளும் அவ்வளவாக தென்படவில்லை. அந்தவகையில் நேற்று சென்னையில் இயல்பு வாழ்க்கை ஓரளவு முடங்கியே போனது.

பட்டாளம், சூளை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரே தேங்கியது. பல வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளில் புகுந்த மழைநீரை கையில் கிடைத்த பாத்திரங்கள் கொண்டு வெளியே அகற்றும் மக்களையும் காணமுடிந்தது. பிற்பகலுக்கு 1 மணிக்கு பிறகே இயல்புநிலை ஓரளவு சீராகி, மழை ஓய்ந்தது. மழை ஓய்ந்தாலும் அதன் தாக்கம் ஓரிரு மணி நேரங்கள் நீடித்தது என்றே சொல்லலாம். நகர் பகுதிகள் போலவே புறநகர் பகுதிகளும் மழையால் இயல்பு வாழ்க்கையை தொலைத்தது.

வடகிழக்கு பருவமழை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அதிரடியாக தொடங்கியிருப்பது சென்னைவாசிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். முதல் நாள் மழைக்கே சென்னை தாக்குப்பிடிக்காத நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் இனி எப்படி இருக்கப்போகிறதோ... என்ற அச்சம் இப்போதே சென்னைவாசிகளின் ஆழ்மனதில் பீதியை உருவாக்கி விட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2. மேகமலை, வெள்ளிமலை பகுதியில் விடிய, விடிய கனமழை: வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது
மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது.
3. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர் - தீயணைப்புத்துறை இயக்குனர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார்நிலையில் உள்ளனர் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் எம்.எஸ்.ஜாபர் சேட் தெரிவித்துள்ளார்.
4. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" - முதலமைச்சர் பழனிசாமி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
5. வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.