தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2020 4:18 AM IST (Updated: 12 Nov 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின் என்றும், தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து தெரிவித்தீர்கள். ஆனால், கனிமொழி எம்.பி. தூத்துக்குடிக்கு நீங்கள் ஏதும் செய்யவில்லை என்கிறாரே?

பதில்:-அவர்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை, மக்களுக்குத் தெரிந்தால் போதும்.

கேள்வி:- அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?

பதில்:-ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்களை அரசு நிரப்பி வருகிறது.

கேள்வி:-பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தீர்களே?

பதில்:-ஏற்கனவே, பெற்றோர்களும், பல கல்வி நிறுவனங்களும் பள்ளிகள் திறக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், பள்ளிகளைத் திறப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமென்ற அச்சத்தைத் தெரிவித்தார்கள். அதனால் பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கூட்ட வேண்டுமென்று அரசு அறிவித்து 9-ந்தேதி கூட்டப்பட்டது. அதில் பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்து விரைவில் அறிவிக்கப்படும்.

கேள்வி:-டாஸ்மாக் கடைகளை குறைப்பது குறித்து...

பதில்:-இப்பொழுது குறைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்பொழுது சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை கடைகளை குறைத்துள்ளோம்.

கேள்வி:-மு.க.ஸ்டாலின் உட்பட, எதிர்க்கட்சிகள் உங்களை போலியான விவசாயி என்று குற்றஞ்சாட்டி வருகிறார்களே?

பதில்:-அவருக்கு விவசாயத்தைப் பற்றியே தெரியாது. போலியான விவசாயி, உண்மையான விவசாயி என்று எப்படிக் கண்டுபிடிப்பார் என்பதை முதலில் தெரிவியுங்கள். அவருக்கு வேளாண்மை பற்றித் தெரிந்தால் பரவாயில்லை. தூத்துக்குடிக்கு வந்தபொழுது பதநீரை சாப்பிட்டுவிட்டு, இதிலென்ன சர்க்கரை கலந்திருக்கிறதா என்று கேட்டார். அப்படிப்பட்டவர் இப்படித்தான் சொல்வார். இது விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாக நான் கருதுகிறேன்.

தூத்துக்குடி சம்பவம் குறித்தும் சொல்லியிருக்கிறார். இது வருவதற்குக் காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் மு.க.ஸ்டாலின் தான். ஏனென்றால், அவர் தொழில் துறை மந்திரியாக இருந்தபொழுது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படுமென்று அவரே கையெழுத்திட்டு நிலம் ஒதுக்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாதென்று, அவர் மறந்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவைக் குறிப்பில் இருக்கிறது. பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் தாராளமாக எடுத்துப் பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. அவர் சட்டமன்றத்திலேயே பேசியிருக்கிறார். பச்சைப் பொய் பேசுகிறார்.

அதுமட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ரூபாய் 1,500 கோடி செலவிடப்படுமென்றும் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் ஆதாரமாக உள்ளது. நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தெரியாதது ஒன்றுமில்லை. அனைத்தையும் அவர்கள் செய்து விட்டு பழியை எங்கள் மீது சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இரண்டாம் விரிவாக்கம் இல்லையென்றால் இந்த நிகழ்வே ஏற்பட்டிருக்காது. இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இந்தப் பிரச்சினை வருவதற்கு முழுக்க முழுக்க, நூற்றுக்கு நூறு சதவீதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்பதை தெளிவுபடக் குறிப்பிடுகிறேன்.

கேள்வி:-கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என்பது குறித்து..

பதில்: நீங்கள் தவறான செய்தியை தெரிவிக்கிறீர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் கூட உயர்கல்வி படிக்க வேண்டும் என்று சொன்னால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது. பொருளாதாரம் இல்லாத சூழ்நிலைதான். திறமையான ஏழை எளிய மாணவர்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அதிகமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு திறந்திருக்கிறது. இப்படி நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். நிறைய பள்ளிகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்க இருக்கின்றோம். ஒவ்வொரு தொகுதியிலும் 5 அல்லது 6 கிளினிக் ஆரம்பிக்கப்படும். அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார். இது மாலை நேரத்தில் திறக்கப்படும். ஆங்காங்கே இருக்கின்ற ஏழை எளிய மக்கள் அங்கே சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேம்பாறு கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவிலிருந்து 500 மீட்டர் நீளத்திற்கு புதிய கடல்அரிப்பு தடுப்பு சுவர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் இரண்டு கிராமங்களில் வசிக்கின்ற சுமார் 4500 மீனவர்கள் பயன்பெறுவார்கள்.

வீரமாமுனிவருக்கு புனித பரலோக மாத ஆலயம் வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பு அளவு சிலையை மாற்றி, குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்று கம்பீரமான தோற்றத்துடன் கூடிய புதிய சிலை நிறுவப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story