வேல் யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
எத்தனை தடைகள் வந்தாலும், வேல் யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், “ தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 17-ம் தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம்.
வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22-ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்து கொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24-ம் தேதி கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2-ம் தேதி இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.
இறுதி நாளான டிசம்பர் 6ம் தேதி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொள்ள இருக்கிறார். ஜே.பி. நட்டா கலந்துகொள்வது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும். வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு; எங்கள் கொள்கைக்கு ஏற்றாற்போல நாங்கள் நடத்துகிறோம். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல்யாத்திரை நடத்துகிறோம். கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா?. சாலையில் செல்பவர்களை எல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? ” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story