சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அமித்ஷா 21-ந் தேதி சென்னை வருகை


சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அமித்ஷா 21-ந் தேதி சென்னை வருகை
x
தினத்தந்தி 16 Nov 2020 5:45 AM IST (Updated: 16 Nov 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி சென்னை வருகிறார். பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (ஏப்ரல் மாதம்) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அவர், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேர்தல் வியூகம்

அரசு நிகழ்ச்சி முடிந்தவுடன் அமித்ஷா, தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். மேலும் அவர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனியாக சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அவரையும் சந்தித்து அரசியல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷா அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தாலும், அவரது வருகையின் முக்கிய நோக்கமே தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிவாய்ப்பை தேடி தருவதற்கும், பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடுவதற்கான வியூகங்கள் அமைப்பதற்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

எல்.முருகன் பேட்டி

அமித்ஷா வருகை தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகை தர இருக்கிறார். அவர் 2 விதமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். ஒன்று அரசு தொடர்பான நிகழ்ச்சிகள். கட்சி சார்பில் 3 நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வருகை தர இருக்கிறார். எனவே அவருக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலும் சிறப்பான வரவேற்பை அளிக்க இருக்கிறோம்.

அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் என 200 பேருக்கு உட்பட்டு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் பா.ஜ.க.வின் உயர்மட்ட கமிட்டி கூட்டமும் நடக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிவேல் யாத்திரையில்...

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எல்.முருகன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அமித்ஷா வருகை தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்?

பதில்:- அவரது வருகை எங்களுக்கு (பா.ஜ.க.வினருக்கு) மிகப்பெரிய ஊக்கம், தைரியம், புத்துணர்ச்சி, இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். அரசியலில் மாற்றம் என்பது போக போக தெரியும்.

கேள்வி:- வெற்றிவேல் யாத்திரையில் அமித்ஷா பங்கேற்பாரா?

பதில்:- வெற்றிவேல் யாத்திரை அந்த நேரத்தில் கோவையில் நடக்கிறது. எனவே அவர் பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அவருடைய நேரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனினும் மற்ற மந்திரிகள் வர இருக்கிறார்கள். 22-ந் தேதி கோவையில் நடக்கும் வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சதானந்தா கவுடா கலந்துகொள்கிறார். 23-ந் தேதி பழனியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் பங்கேற்கிறார். டிசம்பர் 2-ந் தேதி மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பங்கேற்க உள்ளார்.

திருச்செந்தூரில் நடக்கும் வெற்றிவேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் நேரம் கேட்டிருக்கிறோம். இன்னும் ஒருசில தினங்களில் அவருடைய தேதி முடிவாகிவிடும்.

எதிர்க்கட்சிகளுக்கு பயம்

கேள்வி:- அமித்ஷா சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அவர் என்ன மனநிலையில் வருகிறார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவருடைய வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகை சென்று சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்றும், தனது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் முடிந்து அன்றைய தினமே டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷா பங்கு பெறும் கட்சி நிகழ்ச்சிகள் தனியார் மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story