அரியர் தேர்வுகளை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை
பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம், அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தியவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் உத்தரவை எதிர்த்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். அதே சமயம் பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும், ‘அரியர் தேர்வு ரத்து என்பது விதிமுறைகளுக்கு முரணானது’ என்று தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்குமாறு, தற்போது தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story