கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சித்த மருத்துவமனை தொடர்பான பல்வேறு வழக்குகளின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, “கொரோனா தொற்றுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை வார்டுகள் எத்தனை? அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்யப்பட்டு உள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல், “தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ வார்டுகள் உள்பட மொத்தம் 33 சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. அந்த பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படும் என்பதால் 33 சித்த மருத்துவ சிகிச்சைக்கான பிரிவுகளிலும் உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story