கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடக்கம்: மதுரையில் இன்று 4 இடங்களில் பேச்சு


கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடக்கம்: மதுரையில் இன்று 4 இடங்களில் பேச்சு
x
தினத்தந்தி 13 Dec 2020 7:46 AM IST (Updated: 13 Dec 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் தொடங்குகிறார். அவர் 4 இடங்களில் பேசுகிறார். மேலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மதுரை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் பகல் 12.30 மணிக்கு மதுரை வருகிறார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் காரில் புறப்பட்டு அவனியாபுரம் வழியாக பசுமலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வருகிறார். வரும் வழியில்2 இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மதிய உணவுக்குப்பின், பிற்பகல் 3.30 மணியளவில் ஓட்டலில் இருந்து பிரசார வேனில் புறப்படுகிறார். பசுமலையில் இருந்து பெரியார் பஸ் நிலையத்தின் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை 4 மணி அளவில் மேலமாசிவீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

மாலை 4.30 முதல் 5 மணி வரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார்.

அதன்பின்னர் தெப்பக்குளம் வழியாக மாலை 6.30 மணிக்கு அண்ணாநகர் சென்று அங்குள்ள அம்பிகா தியேட்டர் பகுதியிலும், இரவு 7.30 மணியளவில் ஒத்தக்கடை பகுதியிலும் பேசுகிறார். இரவு 8 மணிக்கு கருப்பாயூரணி பகுதியில் உள்ள மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிரசாரத்துக்கு பின்னர், பசுமலையில் உள்ள ஓட்டலில் இரவில் தங்குகிறார்.

நாளை (14-ந்தேதி) காலை அழகர்கோவில் பகுதியில் உள்ள ஓட்டலில் வணிகர்கள், வர்த்தக சங்கத்தினர், தொழில் அதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல், தேனி மாவட்ட பிரசாரத்துக்கு செல்கிறார்.

Next Story