விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப்படுத்தி வருகிறது.
இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுகளுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பாஜக அரசினையும் - அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து, டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் - டிச.18 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள 'உண்ணாநிலைப் போராட்டம்' நடைபெறும்.
ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story