க.அன்பழகன் பிறந்த நாள் விழா; மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடரும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
க.அன்பழகனின் ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று சென்ற கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், 100 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளையும், கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய பேராசிரியர் க.அன்பழகனின் வயது 98. ஆனால் 98-வது வயதில் அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை. க.அன்பழகனை பொறுத்தவரையில் எனக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். என்ன ஏமாற்றம் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கருணாநிதி 95 ஆண்டு காலம் வாழ்ந்து இருக்கிறார். தந்தை பெரியார் 94 வருட காலம் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் க.அன்பழகன் 97 ஆண்டுக்காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எனக்கு இருந்த குறை, வருத்தம் என்னவென்று கேட்டால், இன்னும் 2 ஆண்டு காலம் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதா, வாழ்ந்திருந்தால் 100 ஆண்டு காலம் வாழ்ந்த திராவிடத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதுதான்.
அவர் உடல் நலிவுற்று, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அவரை அடிக்கடி சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் செல்வோம். செல்கின்ற போதெல்லாம் 100 ஆண்டு காலம் நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள். இன்னும் 2 ஆண்டு காலம் நீங்கள் இருந்து உங்களுக்கு நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவோம்’ என்று சொல்வோம். அப்படி இல்லாமல் போனதுதான் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
அவர் சட்டமன்றத்திலே உறுப்பினராக இருந்து பணியாற்றியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இருந்து தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார். ஏன் மேலவையில் அவர் உறுப்பினராக இருந்து பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். 4 முறை அமைச்சர் பதவி ஏற்று கல்வித்துறை அமைச்சராக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, நிதித்துறை அமைச்சராக தன்னுடைய பணியை நிறைவேற்றி தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். தி.மு.க.வின் பொதுச்செயலாளராக 40 ஆண்டுகாலம் இருந்திருக்கிறார்.
எனவே, அவரது பிறந்த நாளை எளிமையாக, இனிமையாக, அதிலும் குறிப்பாக அவர் விரும்பியபடி, கல்வி கற்கக் கூடிய மாணவச் செல்வங்களுக்குப் பயன்படக்கூடிய வகையில், கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவாக நடைபெறுகிறது. இது அவரது ஒவ்வொரு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் நிச்சயமாக நடக்கும்; நடக்க வேண்டும். அதற்குத் தி.மு.க. உறுதுணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், திராவிடர் கழகம் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோரும் மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story