டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என கொடுமை: மகள், மகன் சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை கைது


டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என கொடுமை: மகள், மகன் சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 10:20 PM GMT (Updated: 2021-06-08T03:50:51+05:30)

டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என்று கணவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் வேதனையடைந்த அவரது மனைவி 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில், மகள், மகன் உயிரிழந்தனர். அவர்களது சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை நேற்று கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 45). இவர், அமரர் ஊர்தி வாகனம் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு சித்ராதேவி (40) என்ற மனைவியும், தனலட்சுமி (19), திவ்யா (16) என்ற 2 மகள்கள் மற்றும் விக்னேஸ்வரன் (13) என்ற ஒரு மகன். தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

திவ்யா 11-ம் வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நந்தகுமார், சித்ராதேவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சித்ராதேவி அரளி விதையை (விஷம்) அரைத்து தின்று விட்டு தனது மகள்கள், மகனுக்கும் கொடுத்துள்ளார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் விக்னேஸ்வரன் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சித்ராதேவி மற்றும் தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சைக்கோ தந்தை கைது

இந்தநிலையில், குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகுமாரை துவாக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர், தனது குடும்பத்தினரை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தியதால் இந்த முடிவை அவர்கள் 4 பேரும் எடுத்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நந்தகுமார், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை டி.வி. பார்க்க கூடாது, செல்போன் உபயோகிக்க கூடாது என்று தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் செல்போனை பிடுங்கி பெட்டியில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.

மேலும் நந்தகுமாருக்கு கோபம் வரும்போதெல்லாம் அவரது மகனை இரும்பு குழாயால் அடித்தும், மகளை வீட்டில் உள்ள பாத்திரங்களை எடுத்தும் தாக்கியுள்ளார். மனைவி மற்றும் மகள்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டிவந்துள்ளார். ஒரு சைக்கோ போல தினமும் தனது குடும்பத்தினரை நந்தகுமார் கொடுமைப்படுத்தியுள்ளார். இதன் காரணமாகவே, அவர்கள் 4 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்து உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Next Story