புற்றுநோயை போன்ற ஊழலை தடுக்காவிட்டால் மெல்ல மெல்ல பரவி சமூகத்தை நாசமாக்கிவிடும் ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


புற்றுநோயை போன்ற ஊழலை தடுக்காவிட்டால் மெல்ல மெல்ல பரவி சமூகத்தை நாசமாக்கிவிடும் ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 8 Jun 2021 7:12 PM GMT (Updated: 8 Jun 2021 7:12 PM GMT)

புற்றுநோயை போன்ற ஊழலை தடுக்காவிட்டால் மெல்ல மெல்ல பரவி சமூகத்தை நாசமாக்கிவிடும் என ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் துணை தலைமை என்ஜினீயராக பணியாற்றிவந்தவர் வி.பிரபாகர். லஞ்சப் புகார் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

லஞ்ச வழக்கில் அவருக்கு கீழ்கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து பிரபாகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தது.

அதைத்தொடர்ந்து அவர், தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு துறைமுக நிர்வாகம், பிரபாகர் தன் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

நோட்டீஸ்

அதன்படி, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் பிரபாகர் மீதான ஊழல் உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார்.

அதை ஏற்க மறுத்த ஒழுங்கு நடவடிக்கை குழு, 3 குற்றச்சாட்டு குறித்தும் விளக்கம் அளிக்கும்படி 19.10.2020 அன்று பிரபாகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீசை எதிர்த்தும், இதே விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு துறைமுகசபை நிர்வாகம் அனுப்பிய குற்றச்சாட்டு நோட்டீசை எதிர்த்தும் பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

பணப்பலன் வழங்கவேண்டும்

அந்த நோட்டீசை ரத்து செய்துவிட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தை வரன்முறை செய்து அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சென்னை துறைமுகசபை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் காஜாமுகைதீன் கிஸ்தி, ‘சென்னை துறைமுகசபை பணியாளர்கள் விதிகள்படி, விசாரணை அதிகாரியின் இறுதி அறிக்கையை அப்படியே ஏற்க வேண்டும் என்பது அல்ல. போதுமான காரணங்கள் இருக்கும்போது விசாரணை அதிகாரியின் அறிக்கையை ஏற்க மறுக்கவும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உரிமை உள்ளது. குற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்காக துறை ரீதியான விசாரணையில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை விடுவிக்க வேண்டும் என்பது அல்ல. இதை சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, மனுதாரர் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என்று வாதாடினார்.

தடை இல்லை

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

துறைமுக நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ் பாரபட்சமானது எனக் கூறி மனுதாரர் விளக்கம் அளிக்க மறுத்துள்ளார். குற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்வதில் எந்த தடையும் இல்லை.

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறை ரீதியான விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள கோர்ட்டுகள் அனுமதிக்க வேண்டும். குற்ற வழக்குகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் முடியாதபட்சத்தில் துறை ரீதியான விசாரணையை முடித்து அதன் முடிவுகள் மூடி முத்திரையிட்ட கவரில் வைக்கப்பட வேண்டும்.

சமூகத்தை நாசமாக்கிவிடும்

ஒருவேளை துறை ரீதியான விசாரணை முடிவடைவதற்குள் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழக்க நேரிட்டால் துறை ரீதியான விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய பணப்பலன்கள் சம்பந்தப்பட்டவரின் வாரிசுகளுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும்.

ஊழல் புற்றுநோயை போன்றது. அதை தடுக்காவிட்டால் மெல்ல மெல்ல பரவி இந்த சமூகத்தை நாசமாக்கிவிடும். மனுதாரரரை பொறுத்தவரை வருகிற 30-ந் தேதி அவர் ஓய்வு பெறும் வயதை அடைகிறார்.

எனவே, 10 நாட்களுக்குள் மனுதாரர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காதபட்சத்தில் துறைமுகசபை நிர்வாகம் தனது வசம் இருக்கும் ஆவணங்கள் மூலம் இறுதி உத்தரவைப் பிறப்பிக்கலாம். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story