கோவை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்


கோவை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:45 AM GMT (Updated: 2021-06-09T06:15:57+05:30)

கோவையில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த மார்ச் முதல் வாரத்தில் பரவலாக இருந்தது. அதுவே மே மாதத்தில் உச்சத்தை அடைந்தது. அப்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4,500-க்கும் மேல் பதிவானது.

நோய் தொற்று பரவல் சதவீதமும் 50 முதல் 60 ஆக உயர்ந்தது. இதுதவிர தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையிலும் சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை முதலிடம் பிடித்தது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக கோவையில் கொரோனா நோய் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கி உள்ளது. அத்துடன் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து உள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலும் 22 சதவீதமாக குறைந்து உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை, நோய் தொற்று பரவல், சிகிச்சைக்காக நோயளிகள் அனுமதி, உயிரிழப்பு அனைத்தும் குறைந்து வருகிறது. கடந்த மாதம் 50 சதவீதத்திற்கு மேல் இருந்த கொரோனா தொற்று பரவல் தற்போது 20 முதல் 22 சதவீதமாக குறைந்து உள்ளது.

முழு ஊரடங்கு, தொற்று பாதிப்பை விரைந்து கண்டறிந்து சிகிச்சையளித்தல் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் 1,000-க்கும் கீழ் குறைய வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து நோய் தொற்று பரவல் குறைந்து வந்தாலும், 3-வது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே 3-வது அலையின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story