கொரோனாவால் இறந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என சான்றிதழ் வழங்கப்படுகிறதா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்


கொரோனாவால் இறந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என சான்றிதழ் வழங்கப்படுகிறதா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
x
தினத்தந்தி 11 Jun 2021 9:09 PM GMT (Updated: 11 Jun 2021 9:09 PM GMT)

கொரோனாவால் இறந்தவர்களுக்கு அந்த பாதிப்பு இல்லை என சான்றிதழ் வழங்குவதாக கூறும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சித்த மருத்துவத்துக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், எம்.எல்.ஏ. மோகன் முன்னிலையில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியாதாவது:-

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு என 54 சித்த, 11 யோகா மற்றும் இயற்கை மருத்துவ, 2 ஆயுர்வேத, ஒரு யுனானி, ஒரு ஓமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 மையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி எண் அறிவிப்பு

மேலும் கடந்த ஒரு மாதத்தில் 21 ஆயிரத்து 286 பேர் 69 மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 6 ஆயிரத்து 541 படுக்கைகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மூலம் தமிழகத்தில் செயல்படும் 54 மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

இந்த கட்டளை மையத்தை தொடர்புகொள்ளும் வகையில் 7358723063 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் 8.6 ஏக்கர் பரப்பில் 650 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரணம்

மேலும் கிங் நிறுவன வளாகத்தில் புதிய பன்னோக்கு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சென்றபோது கொரோனா என்றும், அவர் உயிரிழந்தபோது கொரோனா இல்லை என்றும் பரிசோதனை முடிவு வந்தது. அதைப்போன்றுதான் வசந்தகுமார் எம்.பி.யை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போது பரிசோதனை முடிவு வந்தது.

அப்போது அமைச்சராக இருந்தவர்கள் ஏன் அவர்களுக்கு தொற்று பாதித்ததற்கான சான்றிதழ் வழங்கவில்லை? மேலும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் நிவாரண நிதி கொடுக்கப்போகிறார்கள், அதனால்தான் தொற்று பாதிப்பு இல்லை என சான்றிதழ் தருவதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றால் தாய்-தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்குத்தான் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் புரளி

ஆனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இதுபோன்ற புரளியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி டாக்டர்களை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கட்டாயப்படுத்துவதில்லை. அப்படி எங்கேயாவது தவறுகள் நடப்பதாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்த அதற்கென ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவ துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

Next Story