டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? - பாஜக தலைவர் எல்.முருகன்


டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? - பாஜக தலைவர் எல்.முருகன்
x
தினத்தந்தி 13 Jun 2021 6:23 AM GMT (Updated: 2021-06-13T11:53:59+05:30)

தமிழகத்தில் டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாதிப்பு குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று, முதல்-அமைச்சர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலை; ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதல்-அமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார். 

Next Story