அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மரணம் குறைத்து காட்டப்பட்டுள்ளது: அறப்போர் இயக்கம்


அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மரணம் குறைத்து காட்டப்பட்டுள்ளது: அறப்போர் இயக்கம்
x
தினத்தந்தி 15 Jun 2021 7:05 PM GMT (Updated: 2021-06-16T00:35:22+05:30)

மதுரை, திருச்சி, கோவை உள்பட 6 அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா மரணம் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை உயர்வு

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 6 அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இறப்பு தகவல்களை துல்லியமாக கணக்கிட்டும், அது கடந்த ஆண்டை விட எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை கணக்கிட்டும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா இறப்பு எண்ணிக்கை உடன் ஒப்பிட்டும் ஆய்வு மேற்கொண்டோம். கொரோனாவின் 2-ம் அலை உச்சத்தில் இருந்த கடந்த மே மாதத்தின் இறப்பு எண்ணிக்கை, முந்தைய மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த 6 ஆஸ்பத்திரிகளில் இறப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆகும். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த இறப்பு எண்ணிக்கையை விட 7 ஆயிரத்து 262 அதிகமாகவும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த இறப்பு எண்ணிக்கையை விட 8 ஆயிரத்து 438 அதிகமாகவும் உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரிகளில் நடந்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 262 முதல் 8 ஆயிரத்து 438 வரை இருக்கக்கூடும்.

தன்னிச்சையான ஆணையம்

இந்த 6 ஆஸ்பத்திரிகளில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 863 இறப்பு எண்ணிக்கை மட்டுமே ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆஸ்பத்திரிகளில் கொரோனா சார்ந்த நோயினால் ஏற்பட்ட இறப்புகள், சுகாதாரத்துறை வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையை விட 8.4 முதல் 9.8 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். அதாவது கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை 8.4 முதல் 9.8 மடங்கு வரை குறைவாக வெளியிட்டிருக்கக்கூடும்.

8.4 முதல் 9.8 மடங்கு குறைவாக உள்ளதை மாநில அளவில் இட்டுப்பார்த்தால், தமிழகத்தில் கொரோனா சார்ந்த இறப்புகளின் எண்ணிக்கை, அரசு வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையான 12 ஆயிரத்து 870-க்கு பதிலாக 1 லட்சத்து 8 ஆயிரத்து 108 முதல் 1 லட்சத்து 26 ஆயிரத்து 126 ஆக இருக்கக்கூடும். எனவே கொரோனா காலங்களில் நடந்த அனைத்து மரணங்களையும் தணிக்கை செய்யவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்பின் காரணத்துக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கவும் தன்னிச்சையான ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும்.

ஆய்வறிக்கை

இறப்புகளை பெரிய அளவு குறைத்து காண்பித்து தவறு செய்த அதிகாரிகளை பொறுப்புடைமை ஆக்கவேண்டும். நாங்கள் நடத்திய ஆய்வறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story