கொரோனா 2வது அலையில் தினசரி மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்


கொரோனா 2வது அலையில் தினசரி மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:03 AM GMT (Updated: 17 Jun 2021 11:03 AM GMT)

கொரோனா 2வது அலையில் தினசரி மருத்துவக் கழிவுகளின் அளவு 36.5 டன்னாக அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த, அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான மருத்துவக் கழிவுகளையும் 48 மணி நேரத்திற்குள் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அளிக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மே 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 20.5 டன் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த அளவு 36.5 டன்னாக அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது இயக்கத்தில் உள்ள 11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக் கழிவுகள் கையாளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதைய சூழலில் சுத்திகரிப்பு நிலையங்களில் நாளொன்றுக்கு 50 டன் மருத்துவக் கழிவுகளை மட்டுமே கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு மருத்துவமனைகளும், பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story