“கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப்படுத்துங்கள்” - கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு


“கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப்படுத்துங்கள்” - கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 17 Jun 2021 5:04 PM GMT (Updated: 17 Jun 2021 5:04 PM GMT)

முதல்-அமைச்சரின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பிரதமர் மோடி பெருமைப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று டெல்லிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு ‘கார்டு ஆஃப் ஹானர்’ எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீசார் அரசு மரியாதை அளித்தனர். அதனை ஏற்று கொண்ட அவர், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி, நீட் தேர்விலிருந்து விலக்கு, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி பிரதமர் மோடி பெருமைப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையில் கூறியிருப்பதாவது;-

“நீட் தேர்வு
கல்விக் கோரிக்கை

திருக்குறள் தேசியநூல்
கலாசாரக் கோரிக்கை

தடுப்பூசி
உயிர்க் கோரிக்கை

வேளாண் சட்டங்கள்
உழவர் கோரிக்கை

ஜி.எஸ்.டி
பொருளாதாரக் கோரிக்கை

முன்வைத்தமைக்கு நன்றி
முதலமைச்சர் அவர்களே!

கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து
பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே!”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story