மரத்தில் கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சென்னையை சேர்ந்தவர்கள்


மரத்தில் கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சென்னையை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 19 Jun 2021 2:10 AM GMT (Updated: 2021-06-19T07:40:47+05:30)

மரத்தில் கார் மோதியதில் கைக்குழந்தை உள்பட சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெற்றியூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டு சென்றார்.

அந்த காரில் அவரும், அவருடைய மனைவி, மகள்கள் நாகவள்ளி (23), நாகலட்சுமி (21) மற்றும் 9 மாத கைக்குழந்தையான ரித்திகா உள்ளிட்ட 3 பேரக்குழந்தைகள் உள்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.

நேற்று மதியம் அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ராமமூர்த்தி, மகள்கள் நாகவள்ளி, நாகலட்சுமி, கைக்குழந்தை ரித்திகா ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ராமமூர்த்தியின் மனைவி உள்பட மற்ற 4 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story