ஆரணி அருகே, பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - தாய் உள்பட 3 பெண்கள் கைது


ஆரணி அருகே, பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - தாய் உள்பட 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 5:50 AM GMT (Updated: 2021-06-21T11:20:32+05:30)

ஆரணி அருகே, பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை செய்த தாய் உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவனுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் கருதி சிறுவனின் உடலில் இருந்த பேயை விரட்டுவதாக கூறி மூன்று பெண்கள் அந்த சிறுவனை மாறி மாறி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுத போதும் மூன்று பெண்கள் தொடர்ச்சியாக அடித்ததன் காரணமாக மயங்கி விழுந்துள்ளான். பின்னர் உறவினர்கள் சென்று எழுந்திருக்க செய்தப்போது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தனர் என 3 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Next Story