அதிகரிக்கும் வாகன நடமாட்டம்: சென்னையில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் திணறல்


அதிகரிக்கும் வாகன நடமாட்டம்: சென்னையில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் திணறல்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:22 PM GMT (Updated: 2021-06-22T02:52:42+05:30)

சென்னையில், சாலைகளில் மீண்டும் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறி வருகிறார்கள்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டு, தற்போது வருகிற 28-ந்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முழு ஊரடங்கின்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், சாலைகளிலும் வாகன நடமாட்டம் வெகுவாகவே குறைந்தது.

பின்னர் ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததால், அதாவது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் சாலைகளில் வாகன நடமாட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. சென்னையிலும் முக்கிய சாலைகளில் வாகன நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை போன்ற பரபரப்பான சாலைகளில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் ஆர்ப்பரித்து சென்றன.

போக்குவரத்து போலீசார் தவிப்பு

இந்தநிலையில் சென்னையில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேவேளை கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் நேற்று வாகன நடமாட்டம் வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.

இத்தனை நாட்களாக சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து நிறுத்தி விசாரித்து அனுப்பும் பணியிலும், அத்தியாவசிய தேவையின்றி சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று சாலையில் அதிகரித்த வாகன நடமாட்டத்தால் போலீசார் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடியாமல் தவித்து போனார்கள்.

கடை வீதிகளில் கூட்டம்

சிலரை தடுத்து நிறுத்தினால் கூட பெரியளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும் என்பதால் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. அதேவேளை வாகன ஓட்டிகளும் தங்கள் இஷ்டத்துக்கு சாலைகளில் பறந்தனர். இ-பதிவு பெறாத வாகன ஓட்டிகளும் சூழ்நிலையை பயன்படுத்தி சாலைகளில் உலா வந்ததை பார்க்க முடிந்தது. இதனால் சாலைகளில் வாகன நடமாட்டம் மீண்டும் அதிகரித்து தொடங்கி இருக்கிறது.

அதேபோல கடை வீதிகளிலும் மக்கள் கூட்டமாக சுற்றி திரிவதையும் பார்க்க முடிந்தது. ராயபுரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது வாடிக்கையாக இருப்பதாகவும், இதனை தடுக்க போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story