'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கருத்துகள் பதிவு


நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கருத்துகள் பதிவு
x
தினத்தந்தி 23 Jun 2021 7:23 PM GMT (Updated: 2021-06-24T00:53:23+05:30)

‘நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்' என்ற நுழைவுத்தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில், கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் உள்ளனர். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்' தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவற்றிற்கான சட்டவழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கவும் அரசு தரப்பில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு

இந்த ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேரை கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 14-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்ககத்தின் வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் இதுபற்றி அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 17-ந்தேதி இந்த ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நீட் தேர்வு குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு தபால் மூலமாகவோ அனுப்பி பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

இதற்காக 23-ந்தேதி (நேற்று) வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நீட்' தேர்வு தொடர்பாக பேசும்போது, அரசு அமைத்துள்ள ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீட் தேர்வை நீக்குவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் அரசுக்கு அளிக்கும் பரிந்துரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர்கள் அளிக்கும் பரிந்துரையில், பொதுமக்கள் தற்போது கூறியிருக்கும் கருத்துகளும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த கூட்டம்

அந்தவகையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்தும், நீட் தேர்வு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தும் அரசு கொடுத்து இருக்கும் ஒரு மாத கால அவகாசத்துக்குள் பரிந்துரை அளிக்க இருக்கின்றனர். 9 பேர் கொண்ட குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.

Next Story