வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அதிரடி: முக்கிய குற்றவாளி அரியானாவில் கைது; மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு பரபரப்பு தகவல்கள்


வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அதிரடி: முக்கிய குற்றவாளி அரியானாவில் கைது; மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 10:29 PM GMT (Updated: 23 Jun 2021 10:29 PM GMT)

வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, அரியானா மாநிலத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். மேலும் 3 முக்கிய குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

சென்னை,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நூதன கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. முதலில் 19 ஏ.டி.எம். மையங்களில் ரூ.48 லட்சம் அளவுக்கு கொள்ளை நடந்ததாக புகார்கள் வந்தன. தற்போது புகார் எண்ணிக்கை 30-ஐ தாண்டிவிட்டது. கொள்ளைபோன தொகையும் ரூ.1 கோடியை கடந்து செல்கிறது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் கொள்ளை அடிக்கக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும், ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமைப் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணனும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தனிப்படை

பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வடமாநிலத்தைச் சேர்ந்த 4 கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களைப் பிடிக்க கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் அடங்கிய தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்துக்கும், இன்னொரு தனிப்படை ராஜஸ்தான் மாநிலத்துக்கும் விரைந்தனர்.

அதிரடி சாதனை

அரியானா மாநிலத்துக்குச் சென்ற தனிப்படையினர், கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் அடையாளம் கண்டுபிடித்து, அதில் ஒரு முக்கிய கொள்ளையனை நேற்று அதிரடியாக கைது செய்து சாதனை படைத்தனர். மற்ற 3 கொள்ளையர்களையும் சுற்றி வளைத்துவிட்டதாகவும், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரிடம் இருந்து ரூ.4½ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் அமீர் (வயது 37). இவர் அரியானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள வல்லப்கர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். அவர் வசிக்கும் கிராமத்தில் பெரும்பாலானோர் இதுபோன்ற கொள்ளைத் தொழிலில் கைதேர்ந்தவர்கள் ஆவார்கள்.

விமானத்தில்..

கைதான கொள்ளையன் அமீரை, விமானத்தில் சென்னை அழைத்துவருகிறார்கள். சென்னைக்கு கொண்டு வந்ததும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற உள்ளது. கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய நூதன தொழில்நுட்பம் குறித்தும், அதை தெரிந்துகொண்டது எப்படி என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Next Story