ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருள்; கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை


ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருள்; கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை
x
தினத்தந்தி 24 Jun 2021 4:49 AM GMT (Updated: 2021-06-24T10:19:14+05:30)

ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்று உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 

இதன்படி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 2-வது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் மளிகை பொருட்கள், கொரோனா உதவித்தொகை 2-ம் தவணை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்று உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Next Story