பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி


பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 25 Jun 2021 6:46 PM GMT (Updated: 25 Jun 2021 6:46 PM GMT)

பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பிலும், புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பிலும் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ‘மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் உள்ளன என்று கூறி உள்ளது. முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு ரத்து செய்த நிலையில் கடுமையான போராட்டத்துக்கு பின்பு மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். மணிகண்டன், பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் தலையிட்டு இடையூறு ஏற்படுத்தக்கூடும். அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை மற்றும் கைதாகி சில நாட்களே ஆவது போன்றவற்றை கருத்தில்கொண்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறி உள்ளார்.

Next Story