மத்திய இணை மந்திரியான எல். முருகனுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


மத்திய இணை மந்திரியான எல். முருகனுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 8 July 2021 8:55 AM GMT (Updated: 2021-07-08T14:25:11+05:30)

மத்திய இணை மந்திரியான எல். முருகனுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.  இதில் 15 மந்திரிகள், 28 இணை மந்திரிகள் என மொத்தம் 43 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் மத்திய மந்திரிகளாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களில் இணை மந்திரியாக பொறுப்பேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகனும் ஒருவர்.  அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நாகர்கோவில், கோவை தெற்கு, திருநெல்வேலி, மொடக்குறிச்சி என 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.  எனினும், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. உறுப்பினர்கள் அவைக்கு செல்வதற்கு எல். முருகன் பெரும் பங்காற்றியுள்ளார்.  இதனை முன்னிட்டு அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  மத்திய இணை மந்திரியாக பதவியேற்ற எல்.
முருகனுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மாண்புமிகு @PMOIndia தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு.@Murugan_TNBJP அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.  புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியே எல். முருகனை தொடர்பு கொண்டு இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Next Story