தணிக்கை முறையில் மாற்றம்: டைரக்டர் செல்வமணி அறிக்கை


தணிக்கை முறையில் மாற்றம்: டைரக்டர் செல்வமணி அறிக்கை
x
தினத்தந்தி 9 July 2021 1:09 AM GMT (Updated: 9 July 2021 1:09 AM GMT)

தணிக்கை முறையில் மாற்றம்: டைரக்டர் செல்வமணி அறிக்கை.

சென்னை,

தணிக்கை முறையில் மாற்றம் வருவது பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதிய வரைவு திருத்தங்கள் மூலம் படைப்பாளியின் குரல் ஒடுக்கப்பட கூடாது என்ற எங்கள் கருத்தை தெரிவிக்க விரும்புகிறோம். இது அரசுக்கு எதிரானது ஆகாது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். இந்த தணிக்கை வரைவு திட்டத்துக்கு எதிரான கருத்துகள், அரசுக்கு எதிரான கருத்துகள் அல்ல. அரசு ஒரு செயலை செய்ய முனையும்போது அதனை பற்றிய விமர்சனங்களே ஆகும்.

அரசை ஆளுகிற ஆளுங்கட்சிக்கோ அல்லது அரசின் கூட்டணி கட்சிக்கோ எதிரானது அல்ல. அதனால் ஆளுங்கட்சிக்கும், விமர்சனம் செய்கிறவர்களுக்கும் மோதல் என்பது போன்ற சூழலை உருவாக்காதீர்கள். இதுவரையில் ஆட்சியாளர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சுமுகமாகவே இருந்து வருகிறோம். அந்த சுமுக நிலையையே தொடர விரும்புகிறோம்.

எனவே கருத்து சுதந்திரத்தையோ, படைப்பாளியின் எழுத்து சுதந்திரத்தையோ தடுக்காமல் மக்களுக்கு ஆதரவான, சமூகத்துக்கு தேவையான கருத்துகளை சுதந்திரமான திரைப்படமாக எடுக்கிற எங்கள் உரிமையை பறித்துவிடாதீர்கள். ஒருமுறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் தணிக்கை சான்றிதழ்களை ரத்து செய்யலாம் என்ற அபாயகரமான விதியையோ அல்லது தணிக்கை செய்யும் அதிகாரத்தை அரசிடமோ அல்லது அரசுக்கு ஆதரவான அமைப்பிடமோ தந்துவிட வேண்டாம் என எங்கள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Next Story